எடியூரப்பா மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் மந்திரி எம்.பி.பட்டீல் பேட்டி

சித்தராமையா அரசின் ‘கமி‌ஷன் ஏஜெண்டு‘ என்று கூறிய எடியூரப்பா மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று மந்திரி எம்.பி.பட்டீல் தெரிவித்துள்ளார்.

Update: 2017-12-01 23:35 GMT

பெங்களூரு,

பா.ஜனதா மாநில தலைவராக உள்ள எடியூரப்பா விஜயாப்புராவில் மாற்றத்திற்கான பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு வைத்து பேசிய அவர், முதல்–மந்திரி சித்தராமையா அரசின் ‘கமி‌ஷன் ஏஜெண்டுகளாக‘ மந்திரிகள் எம்.பி.பட்டீல், ஆஞ்சனேயா ஆகியோர் இருப்பதாகவும், அவர்களது துறைகளில் ‘கமி‌ஷன் கொள்ளை‘ அதிகரித்து விட்டதாகவும் கூறி இருந்தார்.

இதுகுறித்து மந்திரி எம்.பி.பட்டீலிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, என்னை முதல்–மந்திரி சித்தராமையா அரசின் ‘கமி‌ஷன் ஏஜெண்டு‘ என்று கூறி இருப்பது எனது கவனத்திற்கு வந்தது. என்னை பற்றி எடியூரப்பா தவறாக பேசி இருப்பதை தீவிரமாக எடுத்துள்ளேன். மேலும் எடியூரப்பா மீது மானநஷ்ட வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளேன். இதுதொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.

அவர்களது ஆலோசனையின் பேரில் எடியூரப்பா மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன். என்னை ‘கமி‌ஷன் ஏஜெண்டு‘ என்று கூறிய எடியூரப்பாவுக்கு விரைவில் வக்கீல் நோட்டீசு அனுப்பப்படும்.

இவ்வாறு மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.

மேலும் செய்திகள்