மும்பை காங்கிரஸ் அலுவலகம் சூறை நவநிர்மாண் சேனாவினர் 8 பேர் கைது

மும்பை காங்கிரஸ் அலுவலகத்தை நவநிர்மாண் சேனா கட்சியினர் சூறையாடினார்கள். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-12-01 22:11 GMT
மும்பை,

மும்பை எல்பின்ஸ்டன் ரோடு ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியினர் நடைபாதை வியாபாரிகளை அடித்து விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கு மும்பை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. நடைபாதை வியாபாரிகளுக்கு ஆதரவாக அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். நடைபாதை வியாபாரிகள் பிரச்சினையில் நவநிர்மாண் சேனாவுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் விக்ரோலியில், கடைகளின் பெயர் பலகைகளை மராத்தி மொழியில் வைக்க வேண்டும் என்று நவநிர்மாண் கட்சி தொண்டர்கள் கடைக்காரர்களுக்கு துண்டுபிரசுரம் வினியோகம் செய்தனர். அப்போது காங்கிரசாருக்கும், நவநிர்மாண் சேனாவினருக்கும் இடையே பயங்கர மோதல் உண்டானது. இதில் நவநிர்மாண் சேனா தொண்டர்கள் 5 பேரின் மண்டை உடைந்தது.

இந்த சம்பவம் நவநிர்மாண் சேனா கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அக்கட்சி தலைவர் ராஜ்தாக்கரே தனது கட்சி தொண்டர்கள் அடிபட்டு வருவதை தான் விரும்பவில்லை என்று கூறினார். கட்சியின் மூத்த தலைவரான நிதின் சர்தேசாய், தங்களுடன் மோதலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சிக்கு தக்க பதிலடியை விரைவில் கொடுப்போம் என்றார்.

இந்த நிலையில், மும்பை ஆசாத் மைதான் பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு நேற்று காலை 11 மணியளவில் ஒரு கும்பல் உருட்டு கட்டைகளுடன் புகுந்தது.

அந்த கும்பல் காங்கிரஸ் அலுவலக வரவேற்பு அறையில் உள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். இதில் கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

இதற்கிடையே காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தீப் தேஷ்பாண்டே உள்பட அவரது ஆதரவாளர்கள் 8 பேரை சிவாஜிபார்க் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் செய்திகள்