பொம்மையார்பாளையத்தில் தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்
கடல் அரிப்பால் வீடுகள் சேதமாவதை தொடர்ந்து பொம்மையார் பாளையத்தில் தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
வானூர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் மற்றும் கடல் அரிப்பு காரணமாக கடற்கரையோரம் இருந்த வீடுகள் சேதம் அடைந்து வருகின்றன.
தமிழக அரசு சார்பில் பொம்மையார்பாளையத்தில் மேடான பகுதியில் மீனவர்களுக்காக சுனாமி குடியிருப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. அதில் மீனவர்கள் குடியேறினார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கடல் சீற்றம் மற்றும் கடல் அரிப்பால் பொம்மையார்பாளையம் சேர்ந்த தேவி, அன்னலட்சுமி, குணாளன் ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்தன.
கடல் அரிப்பால் பொம்மையார்பாளையம், பெரிய முதலியார்சாவடி, நடுக்குப்பம், தந்திராயன்குப்பம், சின்ன முதலியார்சாவடி உள்ள மீனவ கிராமங்கள் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் பொம்மையார் பாளையம் மீனவர்கள் தூண்டில் வளைவு திட்டத்தை செயல்படுத்தக்கோரி கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுபற்றிய தகவல் அறிந்ததும் வானூர் தாசில்தார் பிரபாகரன், மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர்.போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்து கூறி உங்களது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என உறுதி கூறினர். இதை தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.