விருத்தாசலம் அருகே சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு கிராமத்து மக்கள் போராட்டம்
விருத்தாசலம் அருகே சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது சத்தியாவாடி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். இதனால் தற்போது பெய்த மழைக்கு சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மாறி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக கிடக்கிறது.
சாலையில் தேங்கி நிற்கும் நீருடன் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் கலந்து நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் முதல், கிராமத்து மக்கள் அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஏற்கனவே சாலையை சீரமைத்து, கழிவுநீர் வழிந்தோடுவதற்கு ஏற்றவகையில் வடிகால் வசதியும் செய்து தரவேண்டும் என்று கிராமத்து மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் இவர்களது கோரிக்கைகளை பரிசீலிக்க வில்லை.
தற்போது நிலமை மோசமானதால், ஆத்திரமடைந்த கிராமத்து மக்கள் நேற்று திடீரென கிராமத்தில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புதிதாக சாலை மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்தி தரக்கோரி கோஷங்களை எழுப்பினர். சிறிது நேரம் போராட்டம் செய்த கிராமத்து மக்கள், பின்னர் அவர்களாகவே அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டதாகவும், இனியும் அதிகரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தினால் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.