மழையால் ஒழுகிய கவணை தொடக்கப்பள்ளியை பார்வையிட சென்ற அதிகாரியை பெற்றோர்கள் முற்றுகை
மழையால் ஒழுகிய கவணை தொடக்க பள்ளியை பார்வையிட சென்ற அதிகாரியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை விடுத்தனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே கவணை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. பழைய ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த பள்ளிக்கூடத்தை அதிகாரிகள் முறையாக பராமரிக்கவில்லை. இதனால் ஓடுகள் உடைந்தும், கட்டிடங்கள் சேதமடைந்தும் காணப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் தண்ணீர் ஒழுகி வகுப்பறை முழுவதும் தேங்கி நின்றது. இந்த தண்ணீரை ஆசிரியர்களும், மாணவர்களும் நேற்று முன்தினம் வெளியேற்றினர். பின்னர் ஈரதரையிலேயே அமர்ந்து மாணவர்கள் கல்வி பயின்றனர்.
இதுபற்றி அறிந்ததும் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து பள்ளியின் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாணவர்கள் அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று காலையிலும் வகுப்பறையில் தண்ணீர் தேங்கி நின்றதால் அங்கன்வாடி மையத்தில் தொடக்கப்பள்ளி இயங்கி வந்தது. இது பற்றி அறிந்ததும் உதவி தொடக்க கல்வி அலுவலர் மோகன், நேற்று காலையில் பள்ளிக்கூடத்தை பார்வையிடுவதற்காக கவணை கிராமத்திற்கு வந்தார். அந்த சமயத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் அந்த பள்ளிக்கூடத்தின் வகுப்பறை முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது.
இது பற்றி தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர், பள்ளிக்கூடத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள், உதவி தொடக்கக்கல்வி அலுவலரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பெற்றோர்கள், ஓட்டுக்கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும். இல்லையெனில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். மேலும் பல்வேறு போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்றனர். அதற்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் மோகன், இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பள்ளிக்கூடம் முன்பு நின்று ஒன்றிய நிர்வாகத்தையும், கல்வித்துறையையும் கண்டித்து கோஷமிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.