பண்ருட்டியில் அனுமதியின்றி இயங்கிய 5 டாஸ்மாக் பார்களுக்கு ‘சீல்’
பண்ருட்டியில் அனுமதியின்றி இயங்கிய 5 டாஸ்மாக் பார்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.;
பண்ருட்டி,
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மூலம் கடைகள் அமைக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடைகளின் அருகில் மதுபிரியர்கள் அமர்ந்து மது குடிப்பதற்காகவும், அவர்களுக்கு தேவையான உணவு, குளிர்பானங்கள், கார வகைகள் பார்களும் இயங்கி வருகிறது.
இந்த பார்களை தனியார் வைத்து நடத்தி வருகின்றனர். இதற்காக அரசிற்கு குறிப்பிட்ட தொகை செலுத்தி, அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் கடலூர் மாவட்டத்தில் சில இடங்களில் டாஸ்மாக் பார்கள் உரிய அனுமதி பெறாமலும், சில பார்கள் புதுப்பிக்காமலும் இயங்கி வருவதாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்படி அதிகாரிகள் தினமும் ஒவ்வொரு பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் டாஸ்மாக் உதவி மேலாளர் மணிவண்ணன், பண்ருட்டி கலால் பிரிவு இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் அதிகாரிகள் பண்ருட்டி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்ட நிலவரம், இருப்பு உள்ளிட்டவைகள் குறித்து விற்பனையாளர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் அருகில் இயங்கி வரும் பார்களிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சில பார்கள் அனுமதியின்றி இயங்கியது தெரியவந்தது. எனவே பண்ருட்டி ரெயில்வே நிலையம் சாலை, கண்டரக்கோட்டை, மணிநகர், பணிக்கன்குப்பம், பண்ருட்டி லிங்க்ரோடு ஆகிய இடங்களில் அனுமதியின்றி இயங்கிய 5 டாஸ்மாக் பார்களை பூட்டி, அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் அதனை நடத்தி வந்தவர்களை அதிகாரிகள் எச்சரித்தனர். இதேபோல் காடாம்புலியூர் உள்ளிட்ட டாஸ்மாக் கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.