கலெக்டர் அலுவலகம் அருகில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உடல் ஊனமுற்றோருக்கான புதிய உரிமைகள் சட்டத்தை மாநில அரசுகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தை மாவட்ட கலெக்டர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் மாதந்தோறும் நடத்த வேண்டும், 40 சதவீதம் ஊனம் உள்ள அனைவருக்கும் பாரபட்சமின்றி மாதாந்திர உதவி தொகை வழங்கி, பயனாளிகள் பட்டியலை தாலுகா அலுவலகங்களின் அறிவிப்பு பலகைகளில் இடம்பெற செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் கோபிநாத், பொருளாளர் புஷ்பநாதன் உள்பட நிர்வாகிகள் பேசினார்கள்.