குமரியில் புயல்–மழை பாதிப்பு: அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி ஆலோசனை
குமரி மாவட்டத்தில் புயல் மற்றும் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒகி புயல் மற்றும் மழை ஏற்படுத்திய பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் நேற்று முன்தினம் வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்.
இந்தநிலையில் மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று காலை நாகர்கோவில் வந்தார்.
பின்னர் அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி ஆகியோர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், விஜயகுமார் எம்.பி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வெள்ள பாதிப்புகள், இதுவரை எடுக்கப்பட்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.
பின்னர் அமைச்சர் உதயகுமார் கூறும்போது, “குமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து கணக்கு எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேவையான நிவாரண உதவிகள் உடனடியாக வழங்கப்படும். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மின் வினியோகத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது“ என்றார்.
பின்னர் அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி ஆகியோர் பார்வதிபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். கூட்டம் முடிந்தபிறகு சுசீந்திரம் உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் உதயகுமார் பார்வையிட்டார்.
தொடர்ந்து பெருஞ்சாணி அணையை அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி ஆகியோர் ஆய்வு செய்து, உபரிநீர் கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டனர். அதன்பிறகு மீண்டும் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.