கடலில் மாயமான குமரி மாவட்டத்தை சேர்ந்த 101 மீனவர்களை தேடும் பணி தீவிரம்
கடலில் மாயமான குமரி மாவட்டத்தை சேர்ந்த 101 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாகர்கோவில்,
ஒகி புயலால் குமரி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் பலர் மாயமாகி உள்ளனர்.
இதனால் அவர்களது குடும்பத்தினர் பரிதவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். குமரி மாவட்டத்தில் மொத்தம் எத்தனை மீனவர்கள் மாயமாகி உள்ளனர் என்பது குறித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நாகர்கோவிலில் அளித்த பேட்டியில் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–
குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 159 மீனவர்கள் மாயமானார்கள். அவர்களில் 58 பேர் கரை திரும்பி உள்ளார்கள். மீதம் உள்ள 101 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
காணாமல் போன மீனவர்களை கப்பற்படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் மூலமாகவும், ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள்.
இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.