கனமழையால் நள்ளிரவில் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் விடிய, விடிய தவித்த மக்கள்

கனமழையால் பழையாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்தது. இதனால் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல் விடிய, விடிய பொதுமக்கள் பரிதவித்தனர். சுசீந்திரம் கோவிலையும் சூழ்ந்தது.;

Update: 2017-12-01 22:15 GMT

சுசீந்திரம்,

‘ஒகி’ புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை நீடித்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள குளங்கள் நிரம்பி வழிகின்றன. குமரி மாவட்டத்தில் உள்ள பழையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று முன்தினம் இரவில் நீர்வரத்து பலமடங்கு அதிகரித்ததால் சுசீந்திரம் பகுதியில் ஆற்று வெள்ளம் கரையை தாண்டி ஊருக்குள் புகுந்தது.

இதனால், சுசீந்திரம், கற்காடு, பரப்புவிளை, இந்திராகாலனி போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் ஆற்று வெள்ளம் புகுந்தது. இதனால் இரவு நேரத்தில் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

சில தாழ்வான பகுதிகளில் வெள்ளம் முழுவதுமாக சூழ்ந்து நின்றதால் நள்ளிரவில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர்.

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் தெப்பக்குளம் நிரம்பியதால் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது. இருப்பினும், கோவிலில் வழக்கம்போல் பூஜைகள் நடந்தன. நீண்ட நேரம் வரை கோவிலில் இருந்து வெள்ளம் வடியவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவதி அடைந்தனர்.

சுசீந்திரத்தில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

இதற்கிடையே வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை தமிழக அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி, மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். இதேபோல் ஒழுகினசேரி பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்தது. இதனால் நெல்லை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் கன்னியாகுமரி சென்று பின்னர் நான்கு வழிச்சாலையில் சென்றன.

மேலும் செய்திகள்