கொங்கு மண்டலம் விரைவில் பா.ஜனதாவின் கோட்டையாக மாறும்; வானதி சீனிவாசன்

கொங்கு மண்டலம் விரைவில் பா.ஜனதாவின் கோட்டையாக மாறும் என்று திருப்பூரில் வானதி சீனிவாசன் பேசினார்.

Update: 2017-12-01 23:15 GMT

திருப்பூர்,

பாரதீய ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான ‘தாமரை அரங்கம்’ திருப்பூர்–தாராபுரம் ரோட்டில் உள்ள மக்கள் சேவை மைய கட்டிடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் காடேஸ்வரா எஸ்.தங்கராஜ் தலைமை தாங்கினார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி, அகில இந்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு 5 வருடத்தையும் முழுமையாக பூர்த்தி செய்யுமா? என்று அந்த கட்சியினருக்கே தெரியாமல் இருந்து வருகிறது. ஆனால் பா.ஜனதா கட்சியின் வளர்ச்சி வேகமாக உள்ளது. அனைத்து தரப்பினரையும் கட்சியின் வளர்ச்சியில் ஈடுபடுத்த வேண்டும்.

கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக பா.ஜனதா கட்சி மட்டுமே அதிக ஆதரவை கொண்டுள்ளது. விரைவில் கொங்கு மண்டலம் பா.ஜனதாவின் கோட்டையாக மாறும். பலர் பா.ஜனதாவில் தங்களை இணைத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:–

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பொறுத்தவரை எங்கள் கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இதில் எங்கள் வெற்றி நிச்சயம் என்ற லட்சியத்தை நோக்கி நடைபோடுகிறது.

தொடர்ச்சியாக தமிழகத்தில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்களுக்கு பிற கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கெயில் திட்டமாக இருந்தாலும், மீத்தேன் திட்டமாக இருந்தாலும் அல்லது பல்வேறு மத்திய அரசின் எந்த திட்டங்களாக இருந்தாலும், அவை தொடங்கும் ஆரம்ப கட்டத்திலேயே அதற்கான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. ஆனால் ஒரு குடிமகன் கூட பாதிக்கக்கூடிய திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து செல்லாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்