செங்கோட்டையில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய அரசு விரைவு பஸ் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

செங்கோட்டையில், ஆற்று வெள்ளத்தில் அரசு விரைவு பஸ் சிக்கியது. இதில் பயணம் செய்த 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2017-12-01 21:00 GMT

செங்கோட்டை,

செங்கோட்டையில், ஆற்று வெள்ளத்தில் அரசு விரைவு பஸ் சிக்கியது. இதில் பயணம் செய்த 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அரசு விரைவு பஸ்

நெல்லை மாவட்டம் செங்கோட்டை பஸ் நிலையம் வாஞ்சிநாதன் சிலை அருகில் கொல்லம் மெயின் ரோட்டில் உள்ள பாலம் விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பண்பொழி, கணக்கப்பிள்ளைவலசை வழியாக தென்காசிக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

2–வது நாளாக நேற்றும் செங்கோட்டையில் பலத்த மழை பெய்ததால் நேற்று அங்குள்ள ஹரிகரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து நெல்லைக்கு அரசு விரைவு பஸ் ஒன்று வந்துகொண்டு இருந்தது. அந்த பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். பஸ் நேற்று காலை 7.30 மணிக்கு செங்கோட்டை வந்தது.

வெள்ளத்தில் சிக்கியது

செங்கோட்டையில் பாலம் விரிவுபடுத்தும் பணி நடைபெறுவதால் புளியரை சோதனை சாவடியில் அதிகாரிகள் பஸ்சை, வேறு வழியில் செல்லுமாறு திருப்பி விட்டனர். உடனே பஸ்சின் டிரைவர் பஸ்சை செங்கோட்டை சைவபிள்ளையார் கோவில் அருகில் உள்ள ஆற்றுப்பாலம் வழியாக ஓட்டி வந்தார்.

அப்போது ஹரிகரா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பஸ் அந்த வெள்ளத்தில் சிக்கி கொண்டது. பஸ்சுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அபய குரல் எழுப்பினர். உடனே பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

பத்திரமாக மீட்கப்பட்டனர்

உடனே பயணிகள் பஸ்சின் பின்பகுதியில் உள்ள அவசர கதவை திறந்து ஒருவர் பின் ஒருவராக வெளியே வந்தனர். இதனால் பஸ்சில் இருந்த 40 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தகவல் அறிந்த செங்கோட்டை அரசு விரைவு பணிமனை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வெள்ளத்தில் சிக்கிய பஸ்சை மீட்டு பணிமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்