வடக்குவிஜயநாராயணம் அருகே மின்சாரம் தாக்கியதில் உடல் கருகி பெண் பலி
வடக்கு விஜயநாராயணம் அருகே டி.வி.யில் கேபிள் ஒயரை சொருகும்போது மின்சாரம் தாக்கியதில் பெண் உடல் கருகி பரிதாபமாக பலியானார்.
இட்டமொழி,
வடக்கு விஜயநாராயணம் அருகே டி.வி.யில் கேபிள் ஒயரை சொருகும்போது மின்சாரம் தாக்கியதில் பெண் உடல் கருகி பரிதாபமாக பலியானார்.
மின்சாரம் தாக்கி பலிவடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள பார்பரம்மாள்புரம் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி கலையரசி (வயது 50). கணவன்– மனைவி 2 பேரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டனர். அவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் இவாஞ்சிலின் மேரி (23) திருமணம் முடிந்து கோவையில் வசித்து வருகிறார். 2–வது மகள் மோனிகா (21) பாளைங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் தங்கியிருந்து ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். 3–வது மகள் செல்விமிஸ்பா (17) நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் தங்கியிருந்து 12–ம் வகுப்பு படித்து வருகிறார். எனவே கலையரசி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது கலையரசி டி.வி.யில் கேபிள் ஒயரை சொருகி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணைநேற்று கதவு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு கலையரசி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு பிணமாக கிடந்த கலையரசியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கலையரசியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.