ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல் 5 பேர் கைது
தானே வர்த்தக்நகர் போலீசாருக்கு நேற்றுமுன்தினம், கோரம் வணிகவளாகம் அருகே செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற ஒரு கும்பல் வரவுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.;
தானே,
தானே வர்த்தக்நகர் போலீசாருக்கு நேற்றுமுன்தினம், கோரம் வணிகவளாகம் அருகே செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற ஒரு கும்பல் வரவுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு காரில் சோதனை போட்டனர்.
இந்த சோதனையின் போது அந்த காருக்குள் இருந்த 5 பைகளில் கத்தை, கத்தையாக செல்லாத ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த ரூபாய் நோட்டுகளை அதிரடியாக பறிமுதல் செய்தனர். அதில் ரூ.1 கோடியே 8 லட்சத்து 70 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காரில் இருந்த 5 பேரையும் கைது செய்தனர். அந்த பணத்தை எங்கிருந்து கொண்டு வந்தனர் என்பது கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.