கொடுங்கையூரில் ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் 50 பவுன் நகை திருட்டு

போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-11-30 23:12 GMT
பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர், 8-வது பிளாக், 6-வது தெருவைச் சேர்ந்தவர் பூபதி (வயது 62). இவர், சென்னை அண்ணாநகர் போக்குவரத்து போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி கோமதி.

இவர்களுக்கு ஒரு மகளும், சதீஷ்(28), சபரி(23) என 2 மகன்களும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி திருவண்ணாமலையில் வசித்து வருகிறார். சதீசுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.

இந்த திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு தங்கள் உறவினர்களை அழைப்பதற்காக பூபதி தனது மனைவியுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சீர்காழிக்கு சென்று விட்டார்.

மகன்கள் இருவரும் வீட்டில் தங்காமல், வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள நண்பர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர். நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் வெளிப்புற இரும்பு கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டும், உள்புறம் உள்ள மரக்கதவு உடைக்கப்பட்டும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் திருட்டுப்போய் இருப்பது தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு வீட்டின் பூட்டு மற்றும் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் நகை, பணத்தை அள்ளிச்சென்று உள்ளனர்.

சீர்காழி சென்று உள்ள தங்கள் பெற்றோர், திரும்பி வந்தால்தான் திருட்டு போன நகை, பணத்தின் முழு விவரமும் தெரிய வரும் என சபரி தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள், மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மர்மநபர்கள் போலீசாரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பூபதி வீட்டின் அருகே உள்ள வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை வேறு திசைக்கு திருப்பி வைத்து விட்டு, கைவரிசையை காட்டி உள்ளனர். இதனால் மர்மநபர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்