புத்தாநத்தம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
புத்தாநத்தம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறை,
மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள கருப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லபொன்னம்பட்டியில் கடந்த சில நாட்களாக முறையாக காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின் மோட்டாரும் பழுது ஏற்பட்டதால், குடிநீரின்றி கடும் அவதிக்குள்ளான அப்பகுதி மக்கள், அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை இருந்தது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் புத்தாநத்தம் – எளமணம் சாலையில் கருப்பூர் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் மற்றும் கருப்பூர் ஊராட்சி செயலாளர் செந்தில் ஆகியோர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் பிரச்சினையை உடனே சரி செய்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று கூறி கிராம மக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மணப்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமி சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின் மோட்டாரை சரி செய்வதுடன் உடனடியாக லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அவர் கூறியதோடு, அதற்கான பணிகளை உடனே தொடங்கியதால் கிராம மக்கள் மறியலை கைவிட்டு கந்து சென்றனர்.