இளம்பெண்ணை கத்தியால் குத்திய வழக்கில் பனியன் நிறுவன தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

பல்லடம் அருகே திருமணம் செய்ய வலியுறுத்தி இளம்பெண்ணை கத்தியால் குத்திய வழக்கில் பனியன் நிறுவன தொழிலாளிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2017-11-30 22:15 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பனப்பாளையத்தை சேர்ந்தவர் அப்துல் முத்தலீப்(வயது 38). இவர் அப்பகுதியில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை செய்த 20 வயது இளம்பெண்ணிடம் சென்று, அப்துல் முத்தலீப் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்துள்ளார். அப்துல் முத்தலீப் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதனால் அந்த இளம்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 24–8–2015 அன்று இரவு அந்த பெண் வேலை முடிந்து பனப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அப்துல் முத்தலீப் அங்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அப்துல் முத்தலீப் தான் வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணின் முகத்தில் சரமாரியாக குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின் அந்த பெண் குணமடைந்தார். அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து அப்துல் முத்தலீப்பை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கொலைமுயற்சி குற்றத்துக்காக அப்துல் முத்தலீப்புக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்