மாணவர்கள் தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் முதன்மைக்கல்வி அலுவலர் பேச்சு

மாணவர்கள் படிப்புடன் சேர்த்து தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கூறினார்.

Update: 2017-11-30 22:15 GMT

செய்யாறு,

செய்யாறு கல்வி மாவட்ட அளவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்கும் விதமாகவும், மாணவர்களை ஊக்கப்படுத்திடும் வகையிலும் கலைத்திருவிழா கொண்டாடப்பட்டது. கலைத்திருவிழா போட்டிகள் கடந்த 2 நாட்களாக செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இந்தோ அமெரிக்கன் மெட்ரிக்பள்ளி, வி.ஜி.என். மெட்ரிக்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடந்தது. போட்டிகளில் சிறப்பாக தங்களின் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

அப்போது முதன்மைக்கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் பேசியதாவது:–

பள்ளியில் பயிலும் மாணவர்களின் மதிப்பெண், தேர்ச்சி சதவீதம் எவ்வளவு என கேட்டுகொண்டிருந்த நிலையோடு தற்போது அவர்களின் தனித்திறமைகளை வளர்க்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கலைத்திருவிழா கொண்டாடப்படுகிறது. செய்யாறு கல்வி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்கள் அதிகளவில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. தன்னுடைய திறமைகளை தன் பெற்றோர், உறவினர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தி வந்த நிலையில் இத்தகைய விழாவின் மூலமாக எல்லோரும் அறியும் வகையில் மாணவர்களின் பன்முக திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கலைத்திருவிழா அமைந்தது.

மாணவர்கள் தங்களுடைய தனித்திறமைகளை வளர்த்து கொண்டு மாநில அளவிலும், தேசிய அளவிலும் அங்கீகாரம் பெற வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்திறமைகள் இருக்கிறது. அதனை கண்டு ஆசிரியர்கள் ஊக்கப்படுத்திட வேண்டும். பள்ளி பருவத்தில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களும் தன்னுடைய தனித்திறமைகளால் சாதனை படைத்துள்ளனர். மாணவர்கள் பள்ளி பருவத்தில் பாடத்துடன் சேர்த்து தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்