காயல்பட்டினம், உவரியில் கடல் சீற்றம் 20 அடி உயரத்துக்கு அலை எழுந்ததால் பரபரப்பு
காயல்பட்டினம், உவரியில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. 20 அடி உயரத்துக்கு அலை எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
காயல்பட்டினம், உவரியில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. 20 அடி உயரத்துக்கு அலை எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடல் கொந்தளிப்புகன்னியாகுமரி அருகே நிலை கொண்டுள்ள புயல் சின்னம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில் மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. உவரியில் நேற்று கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் 20 அடி உயரத்துக்கு ராட்சத அலை எழும்பி வீசியது. தூண்டில் வளைவுக்கு மேல் அலை வந்ததால் அந்த பகுதியில் திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த அலைகளால் தூண்டில் வளைவு சில இடங்களில் சேதம் அடைந்தன.
மக்கள் வெளியேற்றப்பட்டனர்தூண்டில் வளைவு அருகே வீடுகள் கட்டி இருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் உவரியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் ஆகியவற்றை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், ராதாபுரம் தாசில்தார் ரவிகுமார், வருவாய் ஆய்வாளர் கொம்பையா, கிராம நிர்வாக அலுவலர்கள் குமார், ராதாகிருஷ்ணன், மணிகண்டன் ஆகியோர் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
முன் எச்சரிக்கையாக அந்த பகுதியில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. செல்போன் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
படகுகள் சேதம்அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி இருந்தனர். அப்போது வீசிய பலத்த காற்று காரணமாக படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்து உள்ளன. தாளமுத்துநகர், திரேஸ்புரம், இனிகோநகர், குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளில் சுமார் 20 படகுகள் வரை சேதம் அடைந்து உள்ளது. சில படகுகள் தண்ணீரில் மூழ்கின.
படகுகள் சேத விவரம் குறித்து மீன்வளத்துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. அதேநேரத்தில் கடல் நீர் கலங்கியபடி கறுப்பு நிறத்திலும் காணப்பட்டது.
பெரியதாழைதட்டார்மடம் அருகே உள்ள பெரியதாழையில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் கடல்அங்குள்ள வலைகள் பழுதுபார்க்கும் கூடம், மீன்கள் ஏலக்கூடம் வரையிலும் கடல் அரிப்பு ஏற்பட்டது. குலசேகரன்பட்டினம் பதுவைநகரில் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்த 6 படகுகள், பலத்த காற்றில் அடித்து செல்லப்பட்டன. அந்த படகுகள் சற்று தொலைவில் கரை ஒதுங்கியது. அவற்றில் 2 படகுகள் சேதம் அடைந்தன. பின்னர் மீனவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் படகுகளை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்து நிறுத்தினர்.
திருச்செந்தூர் அமலிநகர் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்த படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்தன. இதையடுத்து மீனவர்கள் அனைத்து படகுகளை கடற்கரைக்கு இழுத்து வந்து நிறுத்தினர்.