நெல்லையில் மருத்துவ மாணவர்கள் கொட்டும் மழையில் ஊர்வலம்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் கொட்டும் மழையில் நேற்று ஊர்வலமாக சென்றனர்.

Update: 2017-11-30 21:00 GMT
நெல்லை,

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் கொட்டும் மழையில் நேற்று ஊர்வலமாக சென்றனர்.

தர்ணா போராட்டம்


தமிழக அரசு மருத்துவமனைகளில் 550 டாக்டர்கள் நியமனத்தில் அரசு ஏற்கனவே அறிவித்த நடைமுறையை பின்பற்றவில்லை. எனவே இந்த பணி நியமனத்தை ரத்து செய்து, அந்த பணியிடத்தில் அரசு டாக்டர்களை நியமிக்க வேண்டும். பதிவுமூப்பு அடிப்படையில் டாக்டர்களை பணியமர்த்த வேண்டும். புதிதாக நியமிக்கப்படும் டாக்டர்களுக்கு கிராமப்புற சேவையை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பட்டமேற்படிப்பு மாணவ–மாணவிகள் கடந்த 28–ந் தேதி தர்ணா போராட்டத்தை தொடங்கினர்.

கொட்டும் மழையில் ஊர்வலம்

நேற்று 3–வது நாளாக மருத்துவ மாணவ–மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மழை பெய்து கொண்டு இருந்ததால் மாணவர்கள் குடை பிடித்து இருந்தனர். பின்னர் 11 மணி அளவில் மாணவர்கள் கொட்டும் மழையில் ஊர்வலத்தை தொடங்கினர். இந்த போராட்டத்துக்கு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களின் கூட்டமைப்பு தலைவர் எட்வின் கிங்ஸ் ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பசுபதி முன்னிலை வகித்தார். மாணவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தை சுற்றி வந்து மீண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திரளான பட்டமேற்படிப்பு மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்