கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் பாலாலய விழா பக்தர்கள் கலந்து கொண்டனர்

நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;

Update: 2017-11-30 20:45 GMT

நெல்லை,

நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேகம்

பிரசித்தி பெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் கடந்த 2004–ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அதன்படி 12 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி திருப்பணிகள் நடத்தி கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருப்பணி தொடங்குவதற்காக நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் ராஜகோபுரம், விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு நேற்று முன்தினம் யாகசாலை பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டது.

பாலாலய விழா

நேற்று காலை நெல்லையப்பர் கோவிலில் பாலாலய விழா நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கம் முன்பு விக்னேசுவர பூஜை, 2–ம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து சோமவார மண்டபத்தில் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலய கும்பாபிஷேகம் நடந்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி, உதவி ஆணையாளர் சாத்தையா, கோவில் செயல் அலுவலர் ரோஷினி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்