நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தறிகெட்டு ஓடிய பஸ், நிழற்குடையில் மோதி நொறுங்கியது
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வந்த போது தறிகெட்டு ஓடிய அரசு பஸ் ஒன்று, பயணிகள் நிழற்குடையில் மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் பெண் போலீஸ் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
அழகியமண்டபம்,
நாகர்கோவில் பார்வதிபுரத்தில், களியங்காடு பகுதியில் சாலையின் நடுவில் ஒரு கம்பி சரிவர அகற்றப்படாததால், அந்த இடத்தை அடையாளம் காண்பதற்காக சில கற்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் களியங்காடு பகுதியில் அந்த பஸ் வந்தபோது, சாலையில் நடுவில் இருந்த அந்த கற்கள் மீது மோதியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பஸ், அருகில் இருந்த பயணிகள் நிழற்குடையில் பயங்கரமாக மோதி நொறுங்கியது. இதில் பஸ்சின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் சாம்ராஜ், பெண் போலீஸ் ஜாஸ்லின் உள்பட பஸ்சில் பயணம் செய்து வந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேருரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், இரணியல் போலீசாரும், நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கிய பஸ்சை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பகல் நேரத்தில் நிழற்குடையில் பயணிகள் அதிக அளவில் இருப்பார்கள். அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.