மேல்–சபை தலைவர் இடைதேர்தல் உத்தவ் தாக்கரேவுடன், பா.ஜனதா மந்திரி சந்திப்பு

முன்னாள் காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான நாராயண் ரானே, மராட்டிய மேல்–சபை தலைவர் பதிவியையும் வகித்துவந்தார்.

Update: 2017-11-23 21:49 GMT

மும்பை,

முன்னாள் காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான நாராயண் ரானே, மராட்டிய மேல்–சபை தலைவர் பதிவியையும் வகித்துவந்தார். இந்த நிலையில் உட்கட்சி பூசல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதால், நாராயண் ரானே தனது மேல்–சபை தலைவர் பதிவியை இழந்தார். இதையடுத்து நாராயண் ரானே புதிதாக கட்சி தொடங்கி பா.ஜனதாவுடன் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது காலியாக உள்ள மேல்–சபை தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 7–ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை மாதோஸ்ரீ இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் மேல்சபை தலைவர் தேர்தல் குறித்து விவாதித்ததாக தெரிகிறது.

இதுகுறித்து மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் அளித்த பேட்டியில், ‘‘மேல்–சபை தலைவர் தேர்தல் குறித்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் பேசி முடிவெடுப்பார்கள்’’ என்றார்.

மேல்–சபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் நாராயண் ரானே மீண்டும் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழலில் பா.ஜனதாவில் 122 சட்டமன்ற உறுப்பினர்களும், சிவசேனாவில் 63 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்