கட்டுமான நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்ட மகாடா என்ஜினீயர் பணி இடைநீக்கம் முதல்–மந்திரி உத்தரவு

குடிசை சீரமைப்பு திட்ட முறைகேட்டில் கட்டுமான நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்ட மகாடா என்ஜினீயரை பணி இடைநீக்கம் செய்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

Update: 2017-11-23 22:30 GMT

மும்பை,

குடிசை சீரமைப்பு திட்ட முறைகேட்டில் கட்டுமான நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்ட மகாடா என்ஜினீயரை பணி இடைநீக்கம் செய்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

குடிசை சீரமைப்பு திட்டம்

மும்பை கோரேகாவில் உள்ள ஒரு இடத்தில் மராட்டிய வீட்டு வசதி வாரியம்(மகாடா) மற்றும் தனியார் கட்டுமான நிறுவனம் இணைந்து குடிசை சீரமைப்பு திட்டத்தை மேற்கொண்டன. இந்த திட்ட பணியின் போது கட்டுமான நிறுவனம் 50 சதவீத பணிகளை கூட செய்யவில்லை என குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டினர்.

ஆனால் மகாடா சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் 87 சதவீத பணிகள் முடிந்து விட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

பின்னர் மகாடா அதிகாரிகள் செய்த ஆய்வின் போது கட்டுமான நிறுவனம் பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

என்ஜினீயர் பணி இடைநீக்கம்

இதையடுத்து அங்கு கட்டுமான பணிகளுக்கு மகாடா தடை விதித்தது. மேலும் மகாடா அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கட்டுமான நிறுவனத்திற்கு மகாடா என்ஜினீயர் டி.கே.மகாஜன் என்பவர் சாதகமாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இந்தநிலையில், மேற்படி திட்டம் தொடர்பாக முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அந்த பகுதியை சேர்ந்த மந்திரி வித்யா தாக்குர், மந்திரி சுபாஷ் தேசாய், மகாடா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது என்ஜினீயர் டி.கே.மகாஜனை பணி இடைநீக்கம் செய்தும், சம்மந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.

மேலும் கட்டுமான நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்