பா.ஜனதாவை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வரவில்லை

பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வரும் முடிவை கைவிட்டனர்.

Update: 2017-11-23 23:00 GMT
புதுச்சேரி,

புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சாமிநாதன், நிர்வாகிகள் சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு அறிவித்தது. அவர்களுக்கு கவர்னர் கிரண்பெடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நியமனத்தை ஏற்க மறுத்ததுடன் அவர்களை எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்க முடியாது என்று சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய சலுகைகளையும் அவர்களுக்கு வழங்க மறுத்தார். அவர்கள் சட்டமன்ற கூட்டத்திலும் பங்கேற்க முடியாது என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பா.ஜ.க.வினர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஏற்கனவே முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., தனலட்சுமி ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்தநிலையில் தங்களை சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். இதையொட்டி அவர்கள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், சட்டசபையில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது ஆகும் என்று தெரிவித்து இருந்தனர்.

சட்டசபை கூட்டப்பட்டு இருந்ததையொட்டி நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோர் சட்டசபைக்கு வரலாம் என்று கருதி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முதல்-அமைச்சர், சபாநாயகர், அமைச்சர்களின் வாகனங்கள் தவிர ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து எம்.எல்.ஏ.க்களின் கார்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. அதிகாரிகள் தங்களது கார்களை வெளியே நிறுத்திவிட்டு நடந்தே சட்டசபை வளாகத்துக்குள் வந்தனர். அவர்களையும் பரிசோதனைக்கு பிறகே போலீசார் அனுமதித்தனர்.

ஆனால் எதிர்பார்த்தபடி நியமன எம்.எல்.ஏ.க்கள் யாரும் சட்டசபைக்கு வரவில்லை. ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது சட்டசபைக்கு வந்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் அவர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் கூறுகையில், நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் அனுமதிப்பது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இதில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். இந்த நேரத்தில் சட்டமன்றத்திற்குள் நாங்கள் நுழைவது சட்ட சிக்கலை ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சியினரே திட்டமிட்டு இதுபோன்ற சூழலை ஏற்படுத்தலாம். எனவே நாங்கள் சட்டசபைக்குள் நுழையும் முடிவினை கைவிட்டோம்’ என்றார். 

மேலும் செய்திகள்