கே.ஆர்.பேட்டை டவுனில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

கே.ஆர்.பேட்டை டவுனில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் கொண்டு அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

Update: 2017-11-23 21:30 GMT

மண்டியா,

கே.ஆர்.பேட்டை டவுனில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் கொண்டு அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை டவுனில் உள்ள ஏராளமான அரசு நிலங்களை தனியார் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி உள்ளதாக நகரசபை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து அதிகாரிகள் மாவட்ட கலெக்டர் மஞ்சுஸ்ரீயிடம் தெரிவித்தனர். அவர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றி அரசு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதன்பேரில் நேற்று காலையில் கே.ஆர்.பேட்டை டவுன் போலீசாருடன் நகரசபை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஹேமாவதி லே–அவுட் பகுதிக்கு சென்றனர். அங்கு அரசு நிலங்களில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த ஏராளமான கட்டிடங்களை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு இடித்து அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அறிவிப்பு பலகைகள்

இதில் ஆத்திரம் அடைந்த கட்டிட உரிமையாளர்கள் போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தாங்கள் அந்த இடங்களை காலி செய்ய கால அவகாசம் கொடுக்கப்படவில்லை என்றும், முன்னறிவிப்பு ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் அவர்கள் கூறியதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் முழுவதையும் இடித்து அகற்றி அரசு நிலங்களை மீட்டனர். பின்னர் அந்த நிலங்கள் அரசுக்கு சொந்தமானவை என்று அங்கு அறிவிப்பு பலகைகளை வைத்தனர்.

நஷ்ட ஈடு வழங்கப்பட மாட்டாது

பின்னர் இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

இங்கு தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரசு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீசுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அவர்கள் அந்த இடங்களை காலி செய்யவில்லை. தற்போது இடிக்கப்பட்ட கட்டிடங்கள் அனைத்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களே. அதனால் இவை எதற்கும் நஷ்ட ஈடு வழங்கப்பட மாட்டாது.

இதேபோல் இன்னும் பல்வேறு இடங்களில் அரசு நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் விரைவில் மீட்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்