இளநிலை ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி ஊராட்சி செயலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அனைத்து யூனியன் அலுவலகங்களிலும், ஊராட்சி செயலர்களுக்கு இளநிலை ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.

Update: 2017-11-23 23:00 GMT
உசிலம்பட்டி,

ஊராட்சி செயலர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வழங்கக்கோரி அந்தந்த யூனியன் அலுவலகத்தில் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டி, சேடபட்டி, செல்லம்பட்டி ஆகிய யூனியன் அலுவலகங்களில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்தில் அலுவலகப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் அலுவலக பணிகள் முற்றிலுமாக முடங்கியது. மேலு அனைத்து ஊராட்சிகளிலும் சுகாதார பணிகள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகினர்.

திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் அழகு பாண்டி தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஊரக வளர்ச்சி துறையின் அனைத்து சங்கங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் ஊராட்சி செயலர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அதை கருவூலம் மூலமாக வழங்க வேண்டும். இதை அரசிடம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். 8-வது ஊதியக்குழுவில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை செயல்படுத்தவில்லை. எனவே இதை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்த உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம். தவறும் பட்சத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 22-ந்தேதி சென்னையில் முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட உள்ளோம் என்றார். இந்த போராட்டத்தால் யூனியன் அலுவலகத்தில் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

கொட்டாம்பட்டி யூனியன் அலுவலகத்தில் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் அனைத்து சங்கங்கள், யூனியன் அலுவலக அதிகாரிகள் அலுவலர்கள் அனைத்து ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல மேலூர், அலங்காநல்லூர் யூனியன்களிலும் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்