அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் முதன்மை செயலாளர் உத்தரவு

அரசின் திட்டங்கள் மக்களை நேரடியாக உரிய நேரத்தில் சென்றடைய அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு முதன்மை செயலாளர் உத்தரவிட்டார்.;

Update: 2017-11-23 22:45 GMT
கோவை,

கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் மற்றும் நடைபெறவிருக்கும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஹரிகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஹர்மந்தர் சிங் பேசியதாவது:-

உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றுநோய்கள் குறித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினரால் கட்டப்பட்டு வரும் பாலங்கள், சாலை மேம்பாட்டுப்பணிகளின் நிலை, உள்ளாட்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சிப்பணிகள், கல்வித்துறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்கள் தங்குதடையின்றி வழங்குவதில் கவனம் செலுத்து வேண்டும்.

பள்ளிகளில் நடைபெற்றுவரும் கட்டுமான வசதிகள் குறித்த திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் பொருட்கள் போதிய அளவில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். திறந்த வெளியில் மலம் கழித்தலை முற்றிலும் ஒழித்திட பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

தற்போது நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து முடித்து, அதன் தற்போதைய நிலைகுறித்து மாவட்ட கலெக்டர் மூலம் உடனடியாக அறிக்கை தெரிவிக்க வேணடும்். அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கும் நேரடியாக எந்த வித சிரமமும் இன்றி உரிய நேரத்்தில் சென்றடைய அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர் ராஜ், பொள்ளாச்சி சப் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பயிற்சி கலெக்டர் சரண்யா ஹரி, உதவி ஆணையாளர் காந்திமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்