உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் சர்க்கரை நோயில் இருந்து மீளமுடியும்

பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் டவுட்டி என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் தன் உடல்நிலையில் அக்கறையுடன் முழு உடலுக்கான பொது மருத்துவ பரிசோதனை செய்தார்.

Update: 2017-11-23 08:27 GMT
பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் டவுட்டி என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் தன் உடல்நிலையில் அக்கறையுடன் முழு உடலுக்கான பொது மருத்துவ பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு 59 வயது. ரிச்சர்டுக்கு சர்க்கரை நோய் உள்ளதாக டாக்டர்கள் சொன்னவுடன் அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் சில பரிசோதனைகள் செய்தபோது அவருக்கு டைப் 2 டயபடீஸ் இருப்பது தெரியவந்தது. ரிச்சர்ட் இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானார். காரணம் அவருக்கு புகைக்கும் பழக்கம் இல்லை, நல்ல சத்தான உணவையே உட்கொள்பவர், தவிர அவரது பரம்பரையில் யாருக்கும் சர்க்கரை நோய் இல்லை, அதிக இனிப்புகளை சாப்பிடும் பழக்கமும் தனக்கு இல்லை என்று மருத்துவரிடம் கூறினார். அதிகப்படியான கலோரிகள் உடைய உணவுப் பொருட்களை சாப்பிட்டதால்தான், ரிச்சர்டின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். குறைவான கலோரிகள் உடைய உணவை உட்கொண்டால் சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம் என்று மருத்துவர் கூறவே, உடனடியாக களத்தில் இறங்கினார் ரிச்சர்ட்.

ஆன்லைன் முழுவதும் தேடி குறைந்த கலோரிகள் உள்ள உணவு வகைகள் எவை என்று பட்டியலிட்டார். ஒரு பதிவில் எட்டு வாரங்கள் குறைந்த கலோரியுடைய உணவுகளை உட்கொள்வதன் மூலம் சர்க்கரையை குறைக்கலாம் என்ற ஆய்வைப் படித்து அதை கடைப்பிடிக்க முடிவு செய்தார். அதன்படி தினமும் 800 கலோரிகளை தரும் உணவை மட்டுமே சாப்பிட முடிவு செய்தார்.

வழக்கமான உணவுக்குப் பதிலாக 600 கலோரிகள் மட்டுமே உடைய பழச்சாறுகள், கீரை வகைகள், 200 கலோரி களை உடைய பச்சைக் காய்கறிகளை மட்டுமே சாப்பிடத் தொடங்கினார். மூன்று லிட்டருக்கு அதிகமாகாமல் தினமும் தண்ணீர் குடித்தார். இதை கவனமாகப் பின்பற்றினார். ஆச்சரியத்தகுந்த வகையில் அவர் உடலின் சர்க்கரை அளவுகளில் மாற்றம் ஏற்பட்டது. 11 நாட்கள் தொடர்ந்து இந்த உணவுக் கட்டுப் பாட்டை கடைப்பிடித்த ரிச்சர்ட் மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்து, தன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை இயல்பான அளவுக்கு நிலைநிறுத்தினார். இதனால் ரிச்சர்ட் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

முறையான உணவு கட்டுப்பாட்டின் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க முடியும் என்று தன் நண்பர்களிடம் இந்த தகவலைப் பகிர்ந்து வருகிறார் ரிச்சர்ட். குறைந்த அளவிலான கலோரிகளை உடைய உணவை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவில், கட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்புகள் கரைக்கப்பட்டு அதில் இருந்து தேவையான சர்க்கரை பெறப்படுகிறது. சர்க்கரையின் அளவு நடுநிலையை அடைந்ததும், சீரான உணவுப் பழக்க வழக்கத்தை பின்பற்றுவதன் மூலம், மீண்டும் சர்க்கரை நோய் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளலாம். ரிச்சர்டின் இந்த செயலால், உலக சர்க்கரை நோயாளிகளுக்கு அவர் நம்பிக்கையான உதாரணமாகி விட்டார்.

மேலும் செய்திகள்