நவிமும்பை கார்கரில் ஆட்டோ டிரைவர்கள் இடையே பயங்கர மோதல் போலீஸ்காரர் உள்பட 5 பேர் படுகாயம்

நவிமும்பை கார்கரில் ஆட்டோ டிரைவர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸ்காரர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-11-22 22:46 GMT
மும்பை,

நவிமும்பை கார்கரில் ஆட்டோ டிரைவர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸ்காரர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

பயங்கர மோதல்

நவிமும்பை கார்கர் ரெயில் நிலையம் அருகே ஆட்டோக்களை நிறுத்துவது தொடர்பாக இருவேறு ஆட்டோ யூனியன்களை சேர்ந்த டிரைவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். ஆட்டோக்களும் அடித்து, உடைத்து சேதப்படுத்தப்பட்டன.

இந்த பயங்கர மோதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்து கார்கர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் திலிப் காலே மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சண்டையை விலக்கி விட முயன்றனர். அப்போது போலீஸ்காரர் ஒருவர் மீதும் அடி விழுந்தது. இதில், அவர் காயம் அடைந்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

பின்னர் ஒரு வழியாக இருதரப்பினரையும் போலீசார் விலக்கினர். இதில், இருதரப்பை சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து போலீஸ்காரர் உள்பட 5 பேரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்