சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-22 23:00 GMT

மாமல்லபுரம்,

தமிழக அரசு ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலையை உயர்த்தியதை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் நகர பகுதியில் உள்ள 3 ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம் அருகில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் விசுவநாதன் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் சர்க்கரை விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். இதில் நகர நிர்வாகிகள் மல்லை மோகன், சண்முகானந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சி ரே‌ஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். திருமலை முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தலைமை பொதுக்குழு உறுப்பினரும் செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

இது போல சிங்கபெருமாள் கோவில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கி முன்பு ஊராட்சி தி.மு.க. செயலாளர் கே.பி.ராஜன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்துகொண்டு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் தம்பு தலைமையிலும், தெற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையிலும், அச்சரப்பாக்கம் பேரூரில் பேரூராட்சி செயலாளர் உஷேன் தலைமையிலும், சித்தாமூர் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் ஏழுமலை தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இடைக்கழிநாடு பேரூராட்சியில் பேரூர் செயலாளர் இனியரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவூர் ஊராட்சியில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு காஞ்சீபுரம் வடக்கு மாவட்டச்செயலாளரும், ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத்தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் ராஜேந்திரன், கோவூர் ஊராட்சி முன்னாள் துணை தலைவர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊரப்பாக்கம் ஊரணீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ரே‌ஷன் கடை முன்பு ஊரப்பாக்கம் ஊராட்சி செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவருமான எஸ்.தமிழ்செல்வம் தலைமையில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேங்கடமங்கலம் ஊராட்சியில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு ஊராட்சி செயலாளர் விஜயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய இளைஞரணி செயலாளர் இளங்கோவன், டில்லிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி தெரு கூட்டுறவு ரே‌ஷன் கடை முன்பு பேரூர் பொறுப்பாளர் லோகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நந்திவரம்–கூடுவாஞ்சேரி 13,14 வார்டுகளில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் டி.சதீஷ்குமார், டிஸ்கோ கணேசன், அச்சுதாஸ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சீபுரம் தெற்கு மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் பேரூராட்சி பஸ் நிலையம் அருகே உள்ள ரே‌ஷன்கடை முன்பு காஞ்சீபுரம் தெற்கு மாவட்டச்செயலாளரும் உத்திரமேரூர் எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வாலாஜாபாத் பேரூர் செயலாளர் பாண்டியன், ஒன்றிய செயலாளர் சேகர், மாவட்ட பிரதிநிதி தியாகராஜன், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் ஏ.வி.சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ரே‌ஷன்கடையில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் சன்பிராண்டு கே.ஆறுமுகம், நிர்வாகிகள் சி.வி.எம்.அ.சேகர், வி.எஸ்.ராமகிருஷ்ணன், தி.அன்பழகன், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மதியழகன் உள்பட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பண்பாக்கம் ரே‌ஷன் கடை முன்பு தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன் தலைமையிலும், கீழ்முதலம்பேடு கிராமத்தில் ஒன்றிய துணை செயலாளர் திருமலை தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியில் நகரசெயலாளர் அறிவழகன் தலைமையிலும், மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த நேமளூர் கிராமத்தில் மாவட்ட இலக்கிய அணி நிர்வாகி மனோகரன் தலைமையிலும், ஆரம்பாக்கத்தில் ஒன்றியசெயலாளர் மணிபாலன் தலைமையிலும், மாநெல்லூர் கிராமத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமையிலும், தோக்கம்பூரில் முன்னாள் தலைவர் மணி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன்னேரியில் மீஞ்சூர் வடக்கு ஒன்றியசெயலாளர் சுகுமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தமிழன்இளங்கோ, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் முரளி, பொன்னேரி இளைஞர் அணி அமைப்பாளர் தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் டாக்டர் பரிமளம், விசுவநாதன், கதிரவன், மாவட்ட நிர்வாகி வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊத்துக்கோட்டையில் பொதுக்குழு உறுப்பினர் அபிராமி குமரவேல் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் அப்துல் ரஷீத் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் எஸ்.கே.ஆதாம், மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், தயாநிதி, தேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரம்பாக்கத்தை அடுத்த கொண்டஞ்சேரியில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு சர்க்கரை விலையை இரு மடங்காக உயர்த்தியதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆர்.டி.இ.ஆதிசே‌ஷன், ஒன்றிய நிர்வாகிகள் மஞ்சுளா கோதண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருத்தணியில் உள்ள அக்கய்யாநாயுடு சாலை காந்திரோடு, அரக்கோணம் சாலை மற்றும் கோரமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் ரே‌ஷன் கடைகள் முன்பு திருத்தணி நகரம் மற்றும் திருத்தணி ஒன்றியம் சார்பில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருத்தணி நகர தி.மு.க. செயலாளர் பூபதி. மாவட்ட துணை செயலாளர் சந்திரன், நகர அவைத்தலைவர் நாகன். ஒன்றிய செயலாளர் ஆரத்தி ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்