‘தூய்மை பாரத’ திட்ட விளம்பரத்துக்கு செலவிட்ட நிதியை வைத்து 2 ஆயிரம் கழிவறைகள் கட்டி இருக்கலாம்
‘தூய்மை பாரத திட்ட விளம்பரத்துக்கு செலவிட்ட நிதியை பயன்படுத்தி, மராட்டியத்தில் குறைந்தது 2 ஆயிரம் கழிவறைகள் கட்டியிருக்கலாம் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.;
மும்பை,
‘தூய்மை பாரத திட்ட விளம்பரத்துக்கு செலவிட்ட நிதியை பயன்படுத்தி, மராட்டியத்தில் குறைந்தது 2 ஆயிரம் கழிவறைகள் கட்டியிருக்கலாம் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது:–
கொள்ளையடித்தவர்கள் பொறுப்புமும்பையும், மராட்டியமும் திறந்தவெளியில் மலம் கழிப்பதில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு விளம்பரம் செய்தது. எனினும், இந்த கூற்று யதார்த்த நிலையில் இருந்து விலகியே இருக்கிறது. மந்திரி ராம் ஷிண்டேயின் உடல்நிலை அவரை சாலையோரம் காரை நிறுத்தி சிறுநீர் கழிக்க கட்டாயப்படுத்தி இருக்கிறது. அவரது இந்த செயல் தவறானது தான்.
அதற்காக அவரை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. ஊழலில் திளைத்து, தூய்மை பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கொள்ளையடித்தவர்களும் இதற்கு பொறுப்பாவார்கள். எந்தவொரு முடிவும் இன்றி, கங்கை நதியை தூய்மைப்படுத்த பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை பாரதம்’ திட்டத்திலும் இதே நிலைமை தான் நிலவுகிறது. பிரதமர் தன் கையில் துடைப்பம் எடுத்தார். இதைத்தொடர்ந்து, பாரதீய ஜனதா மந்திரிகளும், எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் அவரை போல் கைகளில் துடைப்பம் எடுத்தனர். இவை அனைத்தும் புகைப்படங்களுக்காகவே நிகழ்த்தப்பட்டன.
2 ஆயிரம் கழிவறைகள்மராட்டியத்தில் 26 மாநகராட்சிகளும், 239 நகரசபைகளும் இருக்கின்றன. மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புறங்களில் மட்டும் 45 சதவீதத்தினர் வசிக்கின்றனர். இதில் 30 சதவீதத்தினருக்கு கழிவறை வசதி இல்லை. ஆகையால், திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.
கிராமப்புறங்களில் நிலைமை இன்னமும் மோசம். கழிவறை வசதி இல்லாததால், திறந்தவெளியில் மலம்கழிக்கும் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.
பிரதமரின் தூய்மை பாரத திட்ட விளம்பரத்துக்கு செலவிடப்பட்ட கோடிக்கணக்கான ரூபாயை பயன்படுத்தி, மராட்டியத்தில் குறைந்தது 2 ஆயிரம் கழிவறைகளாவது கட்டியிருக்கலாம். திறந்தவெளியில் மந்திரி சிறுநீர் கழிக்கும் நிலையையும் தவிர்த்து இருக்கலாம்.
இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.