‘மாமூல்’ கொடுக்க மறுத்த தம்பதி மீது போலீசார் தாக்குதல்: பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனருக்கு நோட்டீசு
‘மாமூல்‘ கொடுக்க மறுத்த தம்பதி மீது போலீசார் தாக்குதல் நடத்தியது தொடர்பாக 6 வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையம், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனருக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது.
பெங்களூரு,
‘மாமூல்‘ கொடுக்க மறுத்த தம்பதி மீது போலீசார் தாக்குதல் நடத்தியது தொடர்பாக 6 வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையம், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனருக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது.
தம்பதி மீது தாக்குதல்பெங்களூரு எலகங்கா அருகே வசித்து வருபவர் ராஜூ. இவருடைய மனைவி அம்பிகா. இவர்கள் 2 பேரும் அந்தபகுதியில் தள்ளுவண்டியில் உணவுக்கடை நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம்(அக்டோபர்) 12–ந் தேதி இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ராஜூ, அம்பிகா தம்பதியிடம் ‘மாமூல்‘ கேட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் ‘மாமூல்‘ கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.
இதனால், ஆத்திரம் அடைந்த போலீசார் தம்பதியை திட்டியுள்ளனர். மேலும், ராஜூவை அவர்கள் தாக்கியுள்ளனர். இதை தடுக்க முயன்ற அம்பிகாவையும் போலீசார் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதுகுறித்து தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகின.
நோட்டீசுஇதன் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமாருக்கு நேற்று முன்தினம் நோட்டீசு ஒன்றை அனுப்பி உள்ளது.
அந்த நோட்டீசில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 6 வாரத்தில் விசாரணை அறிக்கையை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.