கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் போது உரிய வசதியின்றி சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள்

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் போது உரிய வசதியின்றி சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள், சக்கர நாற்காலி வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2017-11-22 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3 சக்கர சைக்கிள், உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. மாவட்டத்தில் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 28 ஆயிரத்து 400 பேர் உள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் தினமும் அவர்களது நலத்துறை அலுவலகத்தில் உதவிகள் பெற்றிட திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு பெறுவதால் அதிக அளவில் மாற்றுத்திறனாளிகள் மனு அளித்து வருகின்றனர்.

மேலும் அன்றைய தினத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் வாசலில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து அலுவலக கட்டிடம் வரை செல்வதற்கு 400 அடி தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலையில் வெளியூரில் இருந்து வரும் மாற்றுத்திறனாளிகளில் ஊனமுற்றவர்கள் அந்த தூரத்தை கடந்து செல்வதற்கு 3 சக்கர சைக்கிள் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் அவர்கள் சாலைகளில் தவழ்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் நுழைவு வாசல் பகுதியில் எந்தவித சாய்வு தள வசதியும் இல்லாமல் உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் நீண்ட படிக்கட்டில் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இல்லையென்றால் கலெக்டர் அலுவலக பின்புறத்தில் உள்ள சாய்வு தள வசதியை பயன்படுத்திட அதிக தூரம் செல்வதுடன், மனு அளிக்க முதல் மாடிக்கு செல்ல லிப்டை பயன்படுத்திடவும், துறை அலுவலகம் செல்லவும் மீண்டும் முன்பகுதிக்கு வரவேண்டிய நிலை இருந்து வருகிறது.

எனவே ரெயில் நிலையம், மருத்துவமனை போன்ற இடங்களில் உள்ளது போல கலெக்டர் அலுவலக வாசலில் வேலை நேரத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்