மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளின் முன்பு தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-11-22 22:15 GMT
தேனி,

ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு, உளுந்தம் பருப்பு விற்பனை நிறுத்தம் ஆகியவற்றை கண்டித்து மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளின் முன்பு தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி, தேனி மாவட்டத்திலும் ரேஷன் கடைகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி நகர தி.மு.க. சார்பில் வாரச்சந்தை எதிரே உள்ள ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் இலங்கேசுவரன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு சர்க்கரை விலை உயர்வை கண்டித்தும், உளுந்தம் பருப்பு விற்பனை நிறுத்தப்பட்டதை கண்டித்து பேசினார்.

இதில் மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் நாராயணபாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தேனி அருகே அன்னஞ்சியில் உள்ள ரேஷன் கடை முன்பு, ஊராட்சி கிளை செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டூரில் ஊராட்சி கிளை செயலாளர் முத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேபோல் பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளி கிராமத்தில் அமைந்துள்ள ரேஷன் கடை முன்பு தி.மு.க. மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் எல்.மூக்கையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பாண்டியன், மாவட்ட பொருளாளர் அருணாசேகர், இ.புதுக்கோட்டை பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரியகுளம் அருகே வடுகபட்டி ரேஷன் கடை முன்பு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு எம்.ஜி.ஆர். கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பி.துரைராஜ் தலைமை தாங்கி பேசினார். ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனூர் ரேசன் கடை முன்பு ஊராட்சி செயலர் பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஒன்றிய துணை செயலாளர்கள் சிவகுமார், ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போடி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள 13 ரேஷன்கடைகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. போடி நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதேபோல் அணைக்கரைப்பட்டி, மீனாட்சிபுரம், தருமத்துப்பட்டி, சிலமலை, சில்லமரத்துப்பட்டி, ராசிங்காபுரம், ராமகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கூடலூரில் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மெயின்பஜார், நடுத்தெரு, கிராமச்சாவடி தெரு வழியாக தி.மு.க.வினர் பேரணியாக வந்தனர். பின்னர் அவர்கள் கூட்டுறவு பண்டகசாலை ரேஷன்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு நகர செயலாளர் லோகன்துரை தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் சொக்கர், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பொன்.விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்