திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவானவர் கைது

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவானவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-11-22 23:00 GMT

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் வேலம்பாளையம் காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிக்குமார் என்கிற ஆறுமுகம். இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவர் ஏலத்தில் கிடைத்த கசர் தொகையை கழித்தது போக மீதியை செலுத்தினால் போதும் என்றும், இந்த சீட்டில் சேர்ந்தால் அதிக லாபம் அடையலாம் என்று பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி வந்தார். இவருடைய பேச்சை கேட்டு ஏராளமான பொதுமக்கள் ரவிக்குமாரிடம் சீட்டு சேர்ந்து மாதம் தோறும் பணம் கட்டி வந்தனர்.

அதன்படி ஒவ்வொருவரும் ரூ. 4 லட்சம், ரூ.1 லட்சம் மற்றும் ரூ. 60 ஆயிரம் என பல்வேறு சீட்டு குரூப்புகளில் பணம் கட்டியுள்ளனர். இந்தநிலையில், திருப்பூர் அங்கேரிபாளையம் ஏ.எஸ்.எம்.காலனியை சேர்ந்த முகுந்தன் என்பவரின் மகன் சுந்தர்(வயது 23) என்பவர், மாதம் தோறும் ரொக்கமாக சீட்டுப்பணத்தை ரவிக்குமாரிடம் கட்டி வந்துள்ளார். அதன்படி இதுவரை ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 260 –ஐ கட்டியதாகவும், மேலும் இவரது தாய் காஞ்சனா பெயரில் ரூ.13 ஆயிரத்து 325–ம், பாட்டி மகாலட்சுமி பெயரில் ரூ.11 ஆயிரத்து 300–ம் கட்டி வந்ததாகவும் தெரியவந்தது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சீட்டுப்பணம் கட்டுவதற்கு ரவிக்குமார் வீட்டிற்கு சுந்தர் சென்றுள்ளார். அப்போது ரவிக்குமாரின் வீடு பூட்டிக்கிடந்தது. இதையடுத்து அவருடைய செல்போனுக்கு சுந்தர் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் ரவிக்குமாரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மேலும் திருப்பூர் பகுதியில் பலரிடம் லட்சக்கணக்கில் சீட்டுப்பணம் வசூலித்துக்கொண்டு திருப்பி கொடுக்காமல் ரவிக்குமார் மோசடி செய்து தலைமறைவானது தெரியவந்தது.

இது தொடர்பாக சுந்தர், வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரவிக்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அனுப்பர்பாளையம் சிக்னல் அருகே ரவிக்குமார் நிற்பதாக வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அங்கு சென்று ரவிக்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்