செண்பகத்தோப்பு அணையில் ரூ.9¾ கோடியில் ‌ஷட்டர் அமைக்கும் பணி

செண்பகத்தோப்பு அணையில் ரூ.9¾ கோடியில் ‌ஷட்டர் அமைக்கும் பணி விரைவில் தொடங்குகிறது என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.

Update: 2017-11-22 23:00 GMT

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி வரவேற்றார். முகாமில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் 1,010 பயனாளிகளுக்கு ரூ.62 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கலெக்டர் கந்தசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

அரசு அதிகாரிகள் நேரில் வந்து நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளோம். குறிப்பாக பெண்கள் தங்கள் வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளமுடியும். டெங்கு காய்ச்சல் வராமலும், கொசுக்கள் உற்பத்தியாகாமலும் தடுக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் மட்டுமே டெங்கு காய்ச்சலுக்கு உண்டான சிகிச்சை பெறும் வசதிகள் உள்ளது.

படவேடு செண்பகத்தோப்பு அணையை ஏற்கனவே பார்வையிட்டு ‌ஷட்டர் அமைக்க ரூ.9 கோடியே 80 லட்சத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து, விரைவில் பணிகள் தொடங்க உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


மேலும் செய்திகள்