கொடுத்த கடனுக்காக வீட்டுமனையை எழுதி வாங்கிய பா.ஜ.க. நிர்வாகி கைது
கொடுத்த கடனுக்காக வீட்டுமனையை எழுதி வாங்கிய பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேட்டை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் மதன் (வயது 30). இவர் சூனாம்பேடு போலீசில் புகார் மனு அளித்தார்.
அந்த புகரில் கூறியிருப்பதாவது:–
நான் சூனாம்பேடு பகுதியை சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ள ராஜகோபால் (வயது 53) என்பவரிடம் கடந்த 2002–ம் ஆண்டு ரூ.1½ லட்சம் கடனாக எனது தாய் பரிமளா பெயரில் வாங்கினேன். கடந்த 2004–ம் ஆண்டு வட்டியும் அசலுமாக ரூ.3½ லட்சத்தை கொடுக்க சென்றேன். அதை ராஜகோபால் வாங்க மறுத்து விட்டார். அதன் பின்னர் ராஜகோபால் என்னை மிரட்டி வீட்டுமனையை எழுதி வாங்கி கொண்டார்.
நேற்று முன்தினம் நான் சூனாம்பேடு பஜார் வீதி வழியாக சென்றபோது ராஜகோபால் என் மீது காரை ஏற்றுவது போல் வந்து காரில் இருந்த டீசல் கேனை எடுத்து என் மீது ஊற்றி தீக்குச்சியை உரசி போட முயன்றார். அங்கு இருந்தவர்கள் தடுத்ததால் நான் தப்பித்து கொண்டேன். இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிகுமார் சப்–இன்ஸ்பெக்டர் ராமு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்