ராஜஸ்தானில் இருந்து லாரிகளில் கடத்தி வந்த ரூ.5 கோடி புகையிலை பொருட்கள் பறிமுதல்
லாரிகளில் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், பொன்னேரி, மீஞ்சூர் பழவேற்காடு உட்பட பல்வேறு பகுதிகளில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதுகுறித்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை செங்குன்றத்திற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து லாரிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
சோழவரம் அருகே உள்ள சிறுணியம் கிராமம் எதிரே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் பின்புறம் லாரிகள் நிறுத்தும் இடத்தில் அந்த லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி மற்றும் போலீசார் பெட்ரோல் பங்க் பகுதிக்கு வாகனங்களில் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அங்கு இருந்து புகையிலைபொருட்கள் கடத்தி வந்த லாரி டிரைவர்கள் உள்பட பலர் தப்பி ஓடினார்கள்.
அங்கு நின்று கொண்டிருந்த ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட 18 டயர்கள் கொண்ட ஒரு லாரி மற்றும் 2 லாரிகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அதில் மூட்டை மூட்டையாக குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா உடன் இருந்தார்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி கூறியதாவது:–
திருவள்ளூர் மாவட்ட காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 200 மூட்டைகளை ஏற்றி வந்த 18 டயர்கள் கொண்ட ராட்சத லாரி மற்றும் 2 சிறிய லாரிகளில் ஏற்றப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.5 கோடி ஆகும். தப்பி சென்ற கடத்தல்காரர்கள் உள்ளிட்ட சிலரை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.