குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; நாராயணசாமி பேட்டி

தமிழகத்தில் இருந்து புதுவைக்கு வந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2017-11-21 23:45 GMT

புதுச்சேரி,

புதுவை மேட்டுப்பாளையம் சொக்கநாதன்பேட்டை அணைக்கரை வீதியில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு மர்ம கும்பல் முன்விரோதத்தில் அரசு ஊழியர் பெருமாள் என்பவரை துரத்திச் சென்று நாட்டு வெடிகுண்டை வீசி விட்டு தப்பி ஓடியது. இதில் அந்த வெடிகுண்டு ரோட்டில் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த வேலு என்பவரின் மகள் சுவேதாவின் (11) காலில் காயம் ஏற்பட்டது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் ஆகியோர் நேற்று மாலை அணைக்கரை வீதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாதிக்கப்பட்ட பெருமாள், சுவேதா ஆகியோரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் முதல்–அமைச்சர் நாராயணசாமி அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டார்.

அப்போது அந்த பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும், அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வார வேண்டும், ஹைமாஸ் விளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் முதல்–அமைச்சர் நாராயணசாமி அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்காலை சென்று பார்வையிட்டார். பின்னர் பொதுமக்களின் கோரிக்கைளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த ஆய்வின் போது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவையில் தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த ரவுடிகள் பலர் புதுவைக்கு வந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று(நேற்று முன்தினம்) காலை புதுவை நகர பகுதியில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களை புதுவை மற்றும் தமிழக போலீசார் உடனடியாக கைது செய்தனர். அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுச்சேரி மாநிலத்தில் வெடிகுண்டு கலாசாரம் இருக்கக்கூடாது என்பது தான் அரசின் கொள்கை. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

வெடிகுண்டு வைத்துக் கொண்டு மிரட்டுபவர்கள், மக்களை தாக்குபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு உள்ளது. குறிப்பாக வெடிகுண்டு கலாசாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக இந்த இடத்தை பார்வையிட்டு இப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறுவது மட்டுமின்றி பாதுகாப்பு கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு வீசியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து புதுவைக்கு வந்து குற்றம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூரில் மிகப்பெரிய தாதாக்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இப்போது 2–ம் தர தாதாக்கள் ஆரம்பித்துள்ளனர். அவர்கள் மனம் திருந்தி சகஜமான வாழ்க்கைக்கு வர வேண்டும். இல்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டியது அரசின் கடமை அதன் காரணமாகவே மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறோம்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்