தேவிகுளம் தாலுகாவில் 10 ஊராட்சிகளில் முழு அடைப்பு போராட்டம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தேவிகுளம் தாலுகாவில் 10 ஊராட்சிகளில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பஸ், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்கபடவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.;
தேவிகுளம்,
இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் வருவாய்த்துறையினர் அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த மறுப்பதை கண்டித்தும், நிலப்பட்டாக்களை ரத்து செய்வதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விவசாயிகள் சார்பில் 10 பஞ்சாயத்துகளில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி தேவிகுளம், மூணாறு, மாங்குளம், மறையூர், காந்தலூர், பள்ளிவாசல், வட்டவடை, ஆனைச்சால், வெள்ளத்தூவல், சின்னக்கானல் ஆகிய 10 பஞ்சாயத்துகளில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி மணி வரை நடந்த இந்த போராட்டம் நடந்தது.
கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பள்ளிகள், அரசு அலுவலகங்களும் மூடப்பட்டு இருந்தன. அதுமட்டுமின்றி வங்கிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களும் செயல்படவில்லை. தமிழ்நாட்டில் இருந்து மூணாறு, மறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் எதுவும் வரவில்லை.
ஆட்டோ, டாக்சி, கார், ஜீப் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. ஆனால் தோட்ட தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். வாகனங்கள் எதுவும் இயக்கப்படாததால் நடந்தே சென்றனர். இதற்கிடையே போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தினர்.
சாலைகளில் வாகனங்களை இயக்கவிடாமல் போராட்டக்காரர்கள் தடுத்தனர். மூணாறில் சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த கார் ஒன்றை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி டிரைவரை தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் போலீசார் வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூணாறு நல்லத்தண்ணி சாலை பகுதியில் ஒரு ஓட்டல் முன்பக்க கதவை மூடிவிட்டு பின்பக்க கதவு திறந்து வைத்து இருந்தனர். அப்போது அந்த ஒட்டலில் சில போலீஸ்காரர்கள் மற்றும் பொதுமக்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போராட்டக்காரர்கள், அந்த ஓட்டலை மூடும்படி வலியுறுத்தினர். ஓட்டலின் முன்பகுதியை சேதப்படுத்தினர். அத்துடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனமும் சேதப்படுத்தப்பட்டது.
மூணாறுக்கு சுற்றுலா வந்த பயணிகள் சுற்றுலா இடங்களை பார்க்க முடியாமல் அறைகளிலேயே முடங்கினர். உணவு தண்ணீர், கிடைக்காமல் சிரமப்பட்டனர். வாகனங்கள் இயக்கப்படாததால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மொத்தத்தில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
போராட்டம் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க 10 ஊராட்சிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இடுக்கி மாவட்டத்தில் அடிக்கடி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுவதால் வியாபாரம், சுற்றுலா தொழில் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேவிகுளம் தாலுகாவில் நடந்த இந்த முழு அடைப்பு போராட்டத்தில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நடத்தினாலும், தோழமை கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சி புறக்கணித்துள்ளது. மேலும் காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவர் ஏ.கே.மணி கூறும்போது, குறிப்பிட்ட சிலர் தங்களது சொந்த தேவைக்காக இந்த முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மூணாறில் ஆளும் கட்சியினர் போராட்டத்தை வெற்றி பெற செய்ய பல முறைகேடான செயலில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களின் வெறுப்பை ஆளும் கட்சியினர் சம்பாதித்துள்ளனர்.
இடதுசாரி கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முதல்–மந்திரி பினராயி விஜயனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நடத்திய போராட்டம் தேவையற்றது. இதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்படபோவதில்லை என்றார்.
இதற்கிடையே முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் வன்முறையில் ஈடுபடுவதை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பேரணி மூணாறில் நடந்தது. ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே முடிவடைந்தது.