மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன பேரணி– ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பேரணி–ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-11-21 22:15 GMT

அடிமாலி,

காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அடிமாலியில் நடந்தது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா தலைமை தாங்கி பேசினார். மாநில துணைத்தலைவர் ஏ.கே.மணி, மாவட்ட பொதுச்செயலாளர் முனியான்டி, இடுக்கி மாவட்ட தலைவர் இப்ராகிம்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா பேசும்போது கூறியதாவது:–

விவசாயிகளின் கண்ணீரும், கவலையும் மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியவில்லை. அதனால் தான் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தொண்டர்களையும் பொதுமக்களையும் ஒன்றுதிரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இயற்கை பேரழிவு மற்றும் விளைபொருட்களின் விலைவீழ்ச்சி, வறட்சி ஆகியவற்றால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அரசு கவலைப்படுவதில்லை.

போராட்டம் ஒரு பக்கம், ஆட்சி ஒரு பக்கம் என்று பினராயி விஜயன் அரசு செயல்படுகிறது. தேவிகுளம் தாலுகாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நடத்தும் போராட்டம் எதற்காக என்று பினராயி விஜயன் கூற வேண்டும். ஒரு மந்திரி தேவிகுளம் சப்–கலெக்டரை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறுகிறார்.

மூணாறு பகுதிகளில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும். இடுக்கி எம்.பி. அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என்று கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூறியது. எம்.பி.யின் 28 ஏக்கர் நிலப்பட்டா ரத்து செய்யப்பட்டவுடன் சிலர் போராட்டம் நடத்த ஓடி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்