மகனின் காதலி அளித்த நம்பிக்கை மோசடி வழக்கில் வயதான தம்பதி விடுவிப்பு மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
மகனின் காதலி அளித்த நம்பிக்கை மோசடி வழக்கில், வயதான தம்பதியை விடுவித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
மும்பை,
மகனின் காதலி அளித்த நம்பிக்கை மோசடி வழக்கில், வயதான தம்பதியை விடுவித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
திருமண ஆசைகாட்டி...மும்பையை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் உள்ளூர் போலீசில் கடந்த 2013–ம் ஆண்டு போலீசில் புகார் மனு தாக்கல் செய்தார். அதில், தன்னுடைய காதலன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பல முறை கற்பழித்ததாகவும், பின்னர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதன்பேரில், அந்த பெண்ணின் காதலனையும், அவரது வயதான பெற்றோரையும் போலீசார் அழைத்து விசாரித்தனர். அப்போது, அவர்களது திருமணத்துக்கு சம்மதம் தெரிவிப்பதாக காதலனின் பெற்றோர் எழுத்துப்பூர்வமாக அந்த பெண்ணுக்கு உத்தரவாதம் அளித்தனர். பின்னர், இருவருக்கும் சாதகம் பொருந்தவில்லை என்று கூறி திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தனர்.
இதனால், நொந்துபோன அந்த பெண், தன்னுடைய காதலன் மற்றும் அவரது பெற்றோர் மீது அதே ஆண்டு மே மாதம் போலீசில் நம்பிக்கை மோசடி புகார் தாக்கல் செய்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விடுவிப்புஇந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி, வயதான தம்பதி சார்பில் மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி ஏ.எம்.பதார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து உத்தரவிட்டார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:–
இருவருக்கும் திருமணம் செய்து வைத்து இந்த விஷயத்தை தர்க்க ரீதியில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றே மனுதாரர்கள் முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால், சாதகம் பொருந்தாமல், விரும்பிய முடிவை தர தவறிவிட்டது.
நடந்த சம்பவங்களுக்காக மனுதார்களை வெறுமனே குற்றம்சாட்ட முடியாது. மேலும், குற்றப்பத்திரிகையை ஆய்வுசெய்ததில், மனுதாரர்கள் ஏமாற்றும் நோக்கத்தில் செயல்படவில்லை என்பது தெரிகிறது. ஆகையால், அவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு நீதிபதி ஏ.எம்.பதார் உத்தரவிட்டார்.