விராஜ்பேட்டை அருகே, 2 குடோன்களில் பதுக்கிய பல கோடி ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் பறிமுதல்

விராஜ்பேட்டை அருகே 2 குடோன்களில் பதுக்கிய பல கோடி ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2017-11-21 21:30 GMT
குடகு,

விராஜ்பேட்டை அருகே 2 குடோன்களில் பதுக்கிய பல கோடி ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக குடோன் களின் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

4 பேர் கைது

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பாலிபெட்டா அருகே வனப்பகுதியையொட்டி மேக்கூரு கிராமம் அமைந்து உள்ளது. இங்கு நேற்று முன்தினம் சிலர் மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்வதாக விராஜ்பேட்டை வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது, அங்கு 5 பேர் கொண்ட கும்பல் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி கொண்டிருந்தது தெரியவந்தது. அந்த சமயத்தில், வனத்துறையினரை பார்த்ததும், மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால், வனத்துறையினர் அவர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்று 4 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். ஒருவர் மட்டும் தப்பி ஓடி விட்டார்.

பல கோடி ரூபாய் மதிப்பிலான...

இதைதொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைதானவர்கள் அதேப்பகுதியை சேர்ந்த ஜூனைத், முகமது சலீம், முஸ்தா, ரமேஷ் என்பதும், தப்பி ஓடியவர் ஜெகன் சங்கப்பா என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் 5 பேரும் சேர்ந்து வனப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மரங்களை வெட்டி அதனை விராஜ்பேட்டை தாலுகா சித்தாப்புரா பகுதியை சேர்ந்த மர வியாபாரியான யகியா என்பவரிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. யகியா அந்த மரங்களை வாங்கி தனக்கு சொந்தமான 2 குடோன்களில் பதுக்கி வைத்து மர அறுவை ஆலைகளுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் வனத்துறையினர் நேற்று சித்தாப்புரா அருகே எம்.ஜி.ரோடு பகுதியில் உள்ள யகியாவுக்கு சொந்தமான 2 குடோன்களிலும் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த 2 குடோன்களிலும் ஏராளமான மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துகொண்டனர். அவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அந்த 2 குடோன்களுக்கும் வனத்துறையினர் ‘சீல்‘ வைத்தனர்.

உரிமையாளருக்கு வலைவீச்சு

முன்னதாக வனத்துறையினர் வருவதை அறிந்த யகியா, அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து வனத்துறையினர் சித்தாப்புரா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள யகியாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்