நிமான்ஸ் மருத்துவமனை நர்சுகள் திடீர் வேலை நிறுத்தம் அறுவை சிகிச்சை பிரிவு மூடப்பட்டது

ஊழியர்கள் பற்றாக்குறையை கண்டித்து நிமான்ஸ் மருத்துவமனை நர்சுகள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.

Update: 2017-11-21 21:30 GMT

பெங்களூரு,

ஊழியர்கள் பற்றாக்குறையை கண்டித்து நிமான்ஸ் மருத்துவமனை நர்சுகள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.

கருப்பு பேட்ச் அணிந்து...

மத்திய அரசின் தேசிய மனநல சுகாதார நரம்பு அறிவியல்(நிமான்ஸ்) மருத்துவமனை பெங்களூரு ஓசூர் ரோட்டில் உள்ளது. அங்கு புதிதாக அறுவை சிகிச்சை வார்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த பிரிவில் ஒரு ‘ஷிப்டு‘க்கு 2 நர்சுகள் பணியாற்ற வேண்டும். ஆனால் ஒருவரை மட்டும் நியமிக்க நிமான்ஸ் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு அங்கு பணியாற்றும் நர்சுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏற்கனவே நர்சுகளின் எண்ணிக்கை பற்றாக்குறையாக இருப்பதால், புதிய நர்சுகளை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து மனு கொடுத்தனர். ஆனால் அதை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அங்கு பணியாற்றும் நர்சுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பு பேட்ச் அணிந்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

வேலை நிறுத்தம்

இந்த நிலையில் அந்த புதிய அறுவை சிகிச்சை வார்டு இன்று(புதன்கிழமை) முதல் செயல்படும் என்று நிமான்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில் ஊழியர்கள் பற்றாக்குறையை கண்டித்து அந்த மருத்துவமனை நர்சுகள் நேற்று திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பணியை புறக்கணித்துவிட்டு, அவர்கள் அந்த மருத்துவமனை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

புதிய நர்சுகள் நியமனம் செய்யப்படும் வரை புதிய அறுவை சிகிச்சை வார்டு சேவையை தொடங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகும் நிலை உண்டானது. இதையடுத்து அந்த மருத்துவமனை பதிவாளர் சேகர், போராட்டம் நடத்திய நர்சுகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் டாக்டர் பத்ரிநாராயணன் உள்பட சில மூத்த டாக்டர்களும், நர்சுகள் சங்க தலைவர் ரிஜின் தாமஸ் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன

இதில், நர்சுகளின் கோரிக்கையை ஏற்று புதிய அறுவை சிகிச்சை பிரிவு தொடங்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் ஏற்கனவே உள்ள அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றும் நர்சுகளுக்கு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசையும் திரும்ப வேண்டும் என்று நர்சுகள் வலியுறுத்தினர். அந்த நோட்டீசையும் வாபஸ் பெறப்படும் என்று நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நர்சுகள் தங்களின் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

இந்த வேலை நிறுத்தம் காலை 8 மணிக்கு தொடங்கி 11 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றது. இதனால் அறுவை சிகிச்சை பிரிவில் நேற்று நடைபெற வேண்டிய அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன. பிற வார்டுகளிலும் 3 பேர் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு நர்சு மட்டுமே வழக்கமான பணிகளை மேற்கொண்டார். இதனால் நோயாளிகள் உரிய சிகிச்சைகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.

ஏற்றுக்கொள்ள முடியாது

இதுகுறித்து நிமான்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் கங்காதர் கூறுகையில், “நிமான்ஸ் மருத்துவமனையில் நர்சுகள் எண்ணிக்கை குறைவாக இருப்பது உண்மை தான். புதிதாக 300 நர்சுகளை நியமிக்கும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்குமாறு நாங்கள் கேட்டுள்ளோம். பணியை புறக்கணித்துவிட்டு நர்சுகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். நிமான்ஸ் மருத்துவமனை வரலாற்றில் முதல் முறையாக பணியை புறக்கணித்துவிட்டு நர்சுகள் இன்று(நேற்று) போராட்டம் நடத்தியுள்ளனர். நோயாளிகளை தவிக்க விட்டு விட்டு இவ்வாறு போராட்டம் நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. நர்சுகளின் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

தங்களின் கோரிக்கை குறித்து நிமான்ஸ் மருத்துவமனை நர்சுகள் சங்க தலைவர் ரிஜின் தாமஸ் கூறும்போது, “இந்த மருத்துவமனையில் பல ஆண்டுகளாக நர்சுகள் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனால் இங்கு பணியாற்றும் நர்சுகளுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. பணியாளர்கள் ஆய்வு பிரிவு, நோயாளிகள்–நர்சுகள் விகிதம் குறித்து சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி நிமான்ஸ் தவிர மத்திய அரசின் பிற மருத்துவமனைகளில் நர்சுகள் சரியான விகிதத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எங்கள் மருத்துவமனையில் மட்டும் விதிமுறைகள்படி 838 நர்சுகள் இருக்க வேண்டிய இடத்தில் சுமார் 500 பேர் மட்டுமே இருக்கிறோம்.

பணிச்சுமை மேலும் அதிகரிக்கும்

இதனால் நர்சுகள் உடல்நிலை சரி இல்லாத நிலையிலும் பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. புதிய நர்சுகளை நியமிக்காமலேயே புதிய அறுவை சிகிச்சை பிரிவை தொடங்குகிறார்கள். இதனால் நர்சுகளுக்கு பணிச்சுமை மேலும் அதிகரிக்கும். பல முறை நிர்வாகத்திற்கு பல்வேறு வழிகளில் நாங்கள் இந்த வி‌ஷயத்தை எடுத்துக் கூறியும் அவாகள் கண்டுகொள்ளவில்லை. நாங்கள் இன்று(அதாவது, நேற்று) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம்“ என்றார்.

மேலும் செய்திகள்