திருப்பூரில் தம்பதி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

திருப்பூரில், வீட்டில் இருந்த தம்பதியை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-11-21 22:45 GMT

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் கஞ்சம்பாளையத்தை அடுத்த தோட்டத்து சாலையை சேர்ந்தவர் மாது. இவருடைய மனைவி ராஜாத்தி. கடந்த 2005–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1–ந்தேதி கணவன்–மனைவி இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென்று 4 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்தது.

பின்னர் அவர்கள் மாது, ராஜாத்தி ஆகியோரை உருட்டுகட்டையால் சரமாரி தாக்கி கொலை செய்தனர். அத்துடன் வீட்டில் இருந்த வெள்ளி கொலுசு மற்றும் 2 ஆடுகளையும் அவர்கள் கொள்ளையடித்துச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 20), லட்சுமணன் (28), கருப்புசாமி (26), ராஜா (30) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கைதான ராஜா ஏற்கனவே இறந்து விட்டார். மேலும் ஜாமீனில் வெளியே வந்த ராஜேஷ்குமார் மற்றும் கருப்புசாமி ஆகியோர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவானார்கள். அவர்கள் இருவரையும் பிடிக்க நீதி மன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் திருப்பூர் மாநகர போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ராஜேஷ்குமார் சென்னையில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னைக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு லோடுமேனாக வேலை பார்த்து வந்த ராஜேஷ்குமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கைதான ராஜேஷ்குமார் மீது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் மற்றொரு கொலை வழக்கு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. திருப்பூரில் தம்பதியை கொலை செய்த வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் மீண்டும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்