வாடிப்பட்டி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை

வாடிப்பட்டி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.2 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.;

Update: 2017-11-21 22:15 GMT

வாடிப்பட்டி

மதுரை–திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை பகுதி உள்ளது. இங்குள்ள சர்வீஸ் ரோட்டில் அம்மன்கோவில் அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. இங்கு காவலாளி நியமிக்கப்படவில்லை. நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் அங்கு வந்தனர். அவர்கள் இந்த ஏ.டி.எம். எந்திரம் அறையில் இருந்த கண்காணிப்பு கேமிராவை உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்தநிலையில் அங்கு பணம் எடுக்க சென்றவர்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து அங்கு விரைந்து வந்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

தடயவியல் நிபுணர் கைரேகைகளை சேகரித்தார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் அந்த பகுதியில் சிறிதுதூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் ஏ.டி.எம். நிறுவன அதிகாரிகள், அங்கு வந்த ஆய்வு செய்தபோது எந்திரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 200 கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்