மாணவ- மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

மாணவ- மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-21 22:45 GMT
வெள்ளியணை,

கரூர் மாவட்டம் மூக்கணாங்குறிச்சி ஊராட்சி தம்மாநாயக்கன்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் நத்தமேடு, வீரணம்பாளையம், அருமைகாரன்புதூர், முத்துக்குளியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கந்தசாரப்பட்டி வழியாக பள்ளிக்கு செல்வது வழக்கம். அவ்வாறு பள்ளிக்கு செல்லும்போது கந்தசாரப்பட்டிக்கும், தம்மாநாயக்கன்பட்டிக்கும் இடையில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வெளியூரை சேர்ந்த சில வாலிபர்கள் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிளில் வந்து நின்றுகொண்டு மாணவிகளை கிண்டல் செய்வதுமாக இருந்துள்ளனர். இதனை பெரிது படுத்தாமல் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு சென்று வந்துள்ளனர்.

பள்ளியை முற்றுகையிட்டனர்

இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் மாணவிகள் சிலரை நிறுத்தி பெயர், ஊர் போன்ற விவரங்களை கேட்டுள்ளார். இதில் பயந்துபோன மாணவிகள் சத்தம் போடவே அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளுடன் பிடித்து ஊருக்கு கொண்டு வந்து அமர வைத்தனர். பின்னர் வெள்ளியணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் அந்த வாலிபர் பொதுமக்களிடமிருந்து நைசாக தப்பியோடி விட்டார். இதையடுத்து பொதுமக்கள் ஒன்று திரண்டு தம்மாநாயக்கன்பட்டி அரசு பள்ளிக்கு சென்று மாணவ- மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு தலைமையாசிரியரிடம் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தலைமையாசிரியர் பெரியசாமி வெள்ளியணை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தப்பியோடிய வாலிபரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், இப்பகுதியில் பள்ளிக்கு வரும் மாணவ- மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்