பெரம்பலூரில் துணிகர சம்பவம்: வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட காரில் 4 டயர்களும் திருட்டு

பெரம்பலூரில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த காரின் அடிப்பகுதியில் கற்களை வைத்துவிட்டு அதிலிருந்த 4 டயர்களையும் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-11-21 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் எல்.ஐ.சி. அலுவலகம் அருகேயுள்ள வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 60). டிரைவரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்தமாக சொகுசு கார் வாங்கினார். குடும்பத்துடன் வெளியூர் செல்வது மற்றும் வீட்டு உபயோகத்திற்காக அந்த காரை பயன்படுத்தினார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெளியே எடுத்து செல்லாமல் வீட்டின் முன்புற பகுதியில் அவர் தனது காரினை நிறுத்தி வைத்திருந்தார். இதனை நன்கு நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் நேற்று அதிகாலை பொழுதில் ஆள் நடமாட்டம் இல்லாத போது ஜாக்கி மூலம் காரின் 4 புறமும் கருங்கற்கள், செங்கலை அடுக்கி வைத்து தூக்கினர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த கருவிகள் மூலம் 4 டயர்களையும் திருடி கொண்டு சென்றனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்த ராஜூ மற்றும் அவரது மனைவி, காரில் 4 டயர்களும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பெரம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியபோது, நாங்கள் நள்ளிரவு வரை வீட்டில் பேசி கொண்டு தான் இருந்தோம். அதன் பிறகே மர்ம நபர்கள் டயர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். ஒருவேளை தெருவில் ஆட்கள் வந்தாலும் ஏதோ காரில் வேலைப்பாடு நடக்கிறது என நினைத்து கொண்டு தான் சென்றிருக்கின்றனர் என ராஜூ தெரிவித்தார். கைரேகை நிபுணர் களும் அந்த காரில் சோதனை செய்து திருடர்களின் ரேகை பதிவாகியிருக்கிறதா? என பார்த்தனர். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டயர்களை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்