வணிக வளாக கட்டிடம் இடிந்து விழுந்தது; முதியவர் பலி மனைவி படுகாயம்

சீர்காழி அருகே வணிக வளாக கட்டிடத்தின் முன்புற பகுதி இடிந்து விழுந்ததில் முதியவர் பலியானார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார்.

Update: 2017-11-21 23:00 GMT
திருவெண்காடு,

சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் 75 ஆண்டுகள் பழமையான வணிக வளாக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் கடந்த 20 ஆண்டுகளாக மூர்த்தி (வயது 50) என்பவர் மருந்து கடை வைத்துள்ளார். இந்த கடைக்கு மருந்துகள் வாங்க நேற்று வேதராஜபுரம் கிராமத்தை சேர்ந்த வைத்தியநாதன் (70), அவருடைய மனைவி சரோஜினி (60) ஆகியோர் சென்றனர். பின்னர் மருந்தை வாங்கிவிட்டு வெளியே வந்தனர். அப்போது வணிக வளாக கட்டிடத்தின் முன்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி வைத்தியநாதனும், சரோஜினியும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அவர்களை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனு மதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வைத்தியநாதன் பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த சரோஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த திருவெண்காடு போலீசார், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வைத்தியநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சீர்காழி தாசில்தார் பால முருகன், திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது தாசில்தார், விபத்துக்கு காரணமான கட்டிடத்தை அகற்றுவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்